Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

வெளிநாட்டு விடுகதைகள்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா


 

வெளிநாட்டு விடுகதைகள் தொகுத்தவர் :

குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா

விற்பனை உரிமை !

பாரி நிலையம்

59.பிராட்வே சென்னை 1.

VELI NAATTU VIDUKATHAIKAL

Selected and Translated from

RIDDLES OF MANY LANDS

by CARL WITHERS and SULA BENET

by permission of ABELAAD - SCHUMAN LTD, NEW YORK.

All Rights Reserved: Copyright year 1958.

Translator : AL. VALLIAPPA

Illustrators : NATANAM and RANU

Publishers : KULANDAI PUTHAKA NILAYAM, MADRAS-17

Sole Distributor : PAARI NILAYAM, MADRAS-1

Printer : JEEVAN PRESS, MADRAS-5

First Edition : SEPTEMBER, 1962.

Price : 75 nP.

வெளியிட்டோர் :

குழந்தைப் புத்தக நிலையம்

சென்னை-17

விலை 75 காசு

உள்ளடக்கம்

எப்படித் தொகுத்தேன்

விடுகதை பற்றிய கதைகள்

விடுகதைகள்

விடைகள்

எப்படித் தொகுத்தேன் ?

* * *

ஒரு நாள் நூல் நிலையத்திலே ஒரு விடுகதைப் புத்தகத்தைப் பார்த்தேன். அது ஓர் ஆங்கிலப் புத்தகம். ‘பல நாட்டு விடுகதைகள்' (Riddies of Many Lands) என்று அதற்குப் பெயர், அதை ஆவலாக எடுத்தேன் ; புரட்டிப் பார்த்தேன். சுமார் 90 நாடுகளில் வழங்கிவருகின்ற 800 விடுகதைகள் அதில் இருந்தன. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

'நம் வீட்டுக் குழந்தைகள் அடிக்கடி நம்மிடம் விடுகதை போட்டு நம்மை விழிக்கவைக்கிறார்களே, அவர்களைச் சும்மா விடக்கூடாது. அவர்களை மடக்குவதற்கு இது சரியான புத்தகம்' என்று தீர்மானித்தேன். உடனே, நான் அந்தப் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்துக் கொண்டு வீடு நோக்கி வந்தேன். வரும்போதே சில விடுகதைகளைத் தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்.

வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளைச் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு, ஒவ்வொரு விடுகதையாகப் போட்டேன், சில விடுகதைகளை அவர்கள் எளிதிலே விடுவித்தார்கள். சில அவ்வளவு சுலபமாயில்லை. சில விடுகதைகளைக் கேட்டதும், “ப்பூ, இதுபோல் நம் நாட்டில் கூட இருக்கிறதே!" என்றார்கள். ஆனாலும், மொத்தத்தில் அந்த விடுகதைகளை அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

இப்படிச் சில நாட்கள் தினமும் மாலையில் நான் புதுப் புது விடுகதைகளை அந்தப் புத்தகத்திலிருந்து கூறிவந்தேன். ஆனாலும், அதில் இருந்த 800 விடுகதைகளில் 125 விடுகதைகளைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவற்றை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கவில்லை. கூடுமான வரையில் அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நம் தமிழ் நாட்டு விடுகதையைப் போலபே கூற முயன்றேன், நாம் விடுகதைகளைப் பாட்டுப் போலல்லவா கூறிவருகிறோம்? அப்படித்தான் நானும் கூறினேன்.

இந்த விடுகதைகளைக் கேட்டு எங்கள் வீட்டுக் குழந்தைகள் மட்டும்தானா மகிழ்ந்தார்கள் ? இல்லை ; அவர் பேரின் நாடார்களிடத்திழும் இந்த விடுகதைகள் பரவி, அவர்களும் மகிழ்ச்சி அடையத் தொடங்கினார்கள்.

அவர்களெல்லாம் கேட்டு மகிழ்ந்த விடுகதைகளைத் தமிழ் நாட்டுக் குழந்தைகள் அனைவருமே கேட்டும், போட்டும் மகிழவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அவ்வாறே அந்த 125 விடுகதைகளையும் தந்திருக்கிறேன்.

'125 என்கிறீர்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் 155 விடுகதைகள் இருக்கின்றனவே!' என்று தானே கேட்கிரீர்கள் ? ஆம், தேமுள்ள 30 விடுகதைகளை ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பர்மா, இலங்கை, மலேயா முதலிய நாடுகளில் உள்ள என் இனிய நண்பர்களுக்கு எழுதி நேராக வரவழைத்தேன்.

திரு. அலி அஸால் (Ali Assai, Assistant to the Director General of Publications, Tehran, Iran), திருமதி காதலீனா வெலாஸ்குலஸ் (Catelina Velasquez-Ty., Curriculam Division, Bureau of Public School, Manila, Philippines), திருமதி மேன்மஸ் ஷவாலி (Madame Maenmas Chavalit, Ministry of Education, Banghok, Thailand), யு ஸோ ஹ்லா {U Soe Hla, Editor, Sarpay Beikman Institute, Rangoon, Burma), டாக்டர் என். டி. விஜசேகரா (Dr. N. D. Wijesekera, Acting Commissioner, Official Language Department. Colombo, Ceylon), வெ. நா. வெள்ளையன் (V. N. Vellayan, Agent, Indian Bank Ltd., Malacca, Malaya} முதலியவர்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி அன்போடு விடுகதைகளை அனுப்பி உதவினர். அவர்களுக்கும், ‘Riddles of. Many Lands' என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து விடுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட எனக்கு அனுமதி தந்த பதிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சென்னை - 17 அழ. வள்ளியப்பா.

20-5-82

விடுகதை

பற்றிய

கதைகள்

சன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும்: பள்ளிக்கூடங்களில் 'விடுகதைப் பாடம்' என்று ஒரு பாடம் இருந்துவந்தது. விடுகதைகளை எப்படி விடுவிப்பது, புதிய புதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்! ரோமாபுரிப் பள்ளிகளில் 'விடுகதைப் பாடம்' கட்டாயப் பாடமாக இருந்து வந்ததாம்!

கிரேக்க நாட்டில் பெரிய விருந்து என்றால் நிச்சயம் அங்கே விடுகதை இருக்கும். விருந்து முடிந்ததும், எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துகொள்வார்கள். ஒரு நிபுணர் விடுகதைகள் போடுவார். மிகமிகச் சிக்கலாக அந்த விடுகதைகள் இருக்கும். யார் அதிகமான விடுகதைகளை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு மாலை போட்டு 'வாழ்க ! வாழ்க !' என்று வாழ்த்துக் கூறுவார்கள்.

*⁠*⁠*

துருக்கியில் சில பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள் விடுகதை போடுவதில் கெட்டிக்காரிகள். அவர்கள் வீட்டுக்குப் பெண் பார்க்க ஒரு பையன் வந்தால், அவன், அந்தப் பெண் போடும் விடுகதைகளுக்குச் சரியாக விடை கூறவேண்டும் அப்போதுதான், அவனை அவள் மணந்து கொள்வாள். இல்லாவிடில், ஏமாற்றத்துடன் திரும்பிப் போகவேண்டியது தான்! விடுகதைக்கு விடை சொல்லத் தெரியாதவர்கள் பிரம்மசாரியாகவே காலம் தள்ள வேண்டியதுதானாம்! அங்கே மற்றொரு வகை மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பயிர்கள் வளரும் காலத்தில் வயல் கரைகளில் உட்கார்ந்துகொண்டு விடுகதைகள் போடுவார்கலாம். யார் யார் சரியான விடை சொல்லுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் நல்ல விளைச்சல் இருக்கும் என்று நம்புகிறார்கள்.

*⁠*⁠*

ஆப்பிரிக்காவில் விடுகதைக்குப் பஞ்சமே இல்லை. அங்கு 'விடுகதை விளையாட்டு' என்று ஒரு வினையாட்டு உண்டு. அந்த விளையாட்டில் சிறுவர்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஒரு கட்சிக்கு ஐந்து ஆறு பேர் இருப்பார்கள். ஒரு கட்சியிலிருந்து ஒருவன் விடுகதை போடுவான். எதிர்க்கட்சிக்காரர்கள் அதை விடுவிக்க வேண்டும். அல்லது பதில்-விடுகதை போடவேண்டும். இப்படியே மணிக்கணக்கில் இந்த விளையாட்டை அவர்கள் நடத்துவார்கள்.

இவர்களைப் போலவே பிஜித் தீவிலும் இளைஞர்கள் கட்சிகளாகப் பிரிந்து கொண்டு விடுகதை போடுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்குத் தோற்றவர்கள் விருந்து வைக்க வேண்டும்!

*⁠*⁠*

ஆப்பிரிக்காவில் மாகுவா என்று ஓர் இனத்தார் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பையனுக்கு அல்லது ஒரு பெண்ணுக்கு வயது வந்ததும், ஒரு சடங்கு நடத்துவார்கள். அந்தச் சடங்கில் அந்தப் பையனுக்கு அல்லது பெண்ணுக்குச் சில விடுகதைகளைப் போட்டு, விடை கூறப் பழக்குவார்கள். விடுகதைக்குச் சரியான விடை கூறத் தெரிந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்களுக்குக் கஷ்டமே இராதாம், எதையும் எளிதிலே சமாளித்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் !

அங்கே இன்னொரு வகைப் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழக்குகளில் தீர்ப்புக் கூற விடு கதையைப் பயன்படுத்துகிறார்கள்! ஒருவனைக் கைது செய்து நீதிபதியின் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், நீதிபதி நடந்தவற்றையெல்லாம் பொறுமையோடு கேட்பார். பிறகு சாட்சிகளை விசாரிக்கமாட்டார். குற்றவாளியாக நிற்பவனிடம் சில கடினமான விடுகதைகளைப் போடுவார். சரியான விடை கூறிவிட்டால், அவன் நிரபராதி. விடை தெரியாமல் விழித்தால், குற்றவாளி தண்டனை நிச்சயம் உண்டு.

*⁠*⁠*

ஹாவாய்த் தீவில் வசிக்கும் கூட்டத் தலைவர்களுக்குள் அடிக்கடி போட்டா போட்டி வந்துவிடும். மலயுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் முதலிய பந்தயங்களெல்லாம் நடத்துவார்கள், அந்தப் பந்தயங்களுடன்! விடுகதைப் பந்தயமும் வைப்பார்கள். இந்தப் பந்தயங்களில் வெற்றி பெற்றவனுக்குத் தோற்றவன் அடிமையாகி விடுவான்!

வட அமெரிக்கா

கனடா

1.⁠ என்னிடம் ஒரு தாள் உண்டு;

⁠மடிக்க முடியாது.

ஏராளமாய்ப் பணம் உண்டு;

⁠எண்ண முடியாது.

கண்ணைக் கவரும் ஆப்பிள் உண்டு;

⁠கடிக்க முடியாது.

பளபளக்கும் வைரம் உண்டு;

⁠பார்க்க முடியாது.

2.⁠ எனக்கு ஐந்து விரல்கள் உண்டு;

⁠ஆனால்

இரத்தமும் சதையும் இம்மியும் இல்லை.

3.⁠ மெல்லியதாய் இருக்கும்—தண்ணீர்

மேலேயே மிதக்கும்.

ஆயிரம் பேர் சேர்ந்தாலும்

அதைத் தூக்க முடியாது.

4.⁠ உனக்குச் சொந்தமான பொருள் ;

ஆனால்,

உன்னைவிட அதிகமாய் உபயோகிப்பார் மற்றவர்கள்.

ஐக்கிய அமெரிக்கா

5.⁠ ஒல்லியாய் இருப்பவராம்;

ஒற்றைக்கண் உடையவராம்;

உடம்பிலே பட்டாலோ

'உஸ்' என்று கத்திடுவாய்!

6.⁠ செக்கச் சிவந்திருக்கும்.

வைக்கோல் கொடுத்தால் தின்னும்;

தண்ணீர் கொடுத்தால் சாகும்.

7.⁠ முன்னால் போனால்

எவரையும் காட்டும்;

முதுகை உரித்தால்

எதையுமே காட்டாது.

8.⁠ விடிந்தவுடனே வேலை செய்வாள்

வேலை இல்லையேல் மூலையில் நிற்பாள்.

9.⁠ ஆயிரம் தடவை ஆடினாலும்

அயராத பெண்கள் யார்?

மெக்ஸிகோ

10.⁠ உன்னை வந்து அமுக்கும்;

ஆனால்,

உனக்குத் தெரியாது இருக்கும்.

11.⁠ மேல் வீட்டில் மத்தளமாம்;

கீழ்வீட்டில் நாட்டியமாம்.

க்யூபா

12.⁠ காட்டிலே பச்சை;

கடையிலே கறுப்பு;

வீட்டிலே சிவப்பு.

13.⁠ சின்னப் பையனைப் பிடித்தேன்;

மஞ்சள் சட்டையைக் கிழித்தேன்;

வாய்க்குள் போட்டு அடைத்தேன்;

வயிற்றுக் குள்ளே சேர்த்தேன்.

14.⁠ ஆடச் சொல்லிச் சட்டை போடுவார்;

ஆடும் முன்பே கழற்றி விடுவார்.

ஹெய்டி

15.⁠ ஒரே குளத்தில் ஒரே மீன்.

வெளியே எட்டிப் பார்த்தாலும்

வேறு குளம் போகாது.

மேற்கு இண்டீஸ்

16.⁠ வயிறு புடைக்கத் தின்றால்தான்

நிமிர்ந்து நிற்பான் குண்டப்பன்.

17.⁠ இரவு வந்தால் தோட்டத்தில்

எத்தனையோ பூ பூக்கும்.

பொழுது விடிந்ததுமே

பூவெல்லாம் மறைந்துவிடும்.

18.⁠ அப்பா வீட்டுக் குதிரை

அற்புத மான குதிரை.

காதைப் பிடித்தால்

வாயால் கடிக்கும்!

19.⁠ வேகமாய்ப் போகிற அம்மணிக்கு,

விழுந்த கைக்குட்டையை

எடுக்க நேரமில்லை.

20.⁠ கறுப்புக் கோட்டுப் போட்டிருப்பார்;

கழற்றிக் கீழே வைக்கமாட்டார்;

விருந்துச் சாப்பாடு என்றாலோ

விழுந்தடித்து ஓடி வருவார்.

21.⁠ தகப்பனுக்குப் பத்துப் பிள்ளை.

அவர்கள்

தலைக்குப் பின்னே தொப்பியுண்டு.

22.⁠ குதிரை தாவத் தாவக்

குறையுது வாலின் நீளம்.

தென் அமெரிக்கா

பிரேஸில்

23.⁠ மஞ்சள் புடவை கட்டி

வரிசையாய்ப் பத்துப் பெண்கள்

கயிற்றைப் பிடித்துக் கொண்டு

கடையிலே தொங்குகின்றார்.

ஆர்ஜென்டைனா

24.⁠ என் பெயரைக் கேட்பவர் அநேகர்.

என்னைப் போட்டு மிதிப்பவரும் அநேகர்.

நான் யார் பெயரையும் கேட்பதுமில்லை;

எவரையும் போட்டு மிதிப்பதும் இல்லை.

--நான் யார்?

சிலி

25.⁠ பல்லைப் பிடித்து அழுத்தினால்

பதறிப் பதறி நான் அழுவேன்.

26.⁠ கழனியிலே கதிர் விளையும்;

கையால் பறிக்க மாட்டேன்;

கத்தரியால் வெட்டிடுவேன்.

27.⁠ முண்டாசு கட்டின சின்னப் பையன்

வீட்டுச் சுவரில் மோதினான்;

வெளிச்சம் போட்டுச் செத்தான்.

பராகுவே

28.⁠ பாட்டுப் பாடி வருவார்;

‘பட்’டென்று அடித்தால் சாவார்.

பெரு

29.⁠ சின்னக் குகைக்குள்ளே

சிவப்புக் கொடி அசையுது.

30.⁠ ஆசையுடன் சந்தையிலே

ஐந்துபணம் நான் கொடுத்து,

அழகான ஒரு பெண்ணே

அழைத்துவந்தேன் வீட்டிற்கு

அழைத்துவந்த பெண் என்னை

அழவைத்து விட்டாளே !

இங்கிலாந்து

31.⁠ காலும் இல்லை; கையும் இல்லை;

கண்ணுக் கழகாய் இருப்பவள்.

வெள்ளை உடுப்புப் போட்டவள்;

மெல்ல மெல்லக் குறைபவள்.

சிவப்பு மூக்கு உடையவள்;

சிறிது சிறிதாய்க் குறைபவள்.

32.⁠ உள்ளே இருந்தால்

ஓடித் திரிவான்;

வெளியில் வந்தால்

விரைவில் மடிவான்.

வேல்ஸ்

33.⁠ கன்னங் கரிய நிறம்

அதுவாம் கல்வி பரவ உதவுவதாம்.

34.⁠ வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு

விளக்கு எரியுது தலைக்கு மேலே.

அயர்லாந்து

35.⁠ நிலமோ வெள்ளை;

விதையோ கறுப்பு.

36.⁠ வெள்ளை வீட்டுக்கு இரண்டு கூரை.

கதவும் இல்லை; காவலும் இல்லை.

37.⁠ அடிக்க அடிக்க

அழுதான்; அழுதான்.

வழிந்த கண்ணீரால்

வாளி நிறைந்தது.

பிரான்ஸ்

38.⁠ வாலைப் பிடித்து இழுக்க இழுக்க

வளர்ந்து கொண்டே போகும்.

39.⁠ வெள்ளை வெள்ளைப் பாத்திரம்;

மூடி யில்லாப் பாத்திரம்.

இத்தாலி

40.⁠ வெள்ளை வெள்ளை நாற்காலி;

மேலும் கீழும் நாற்காலி;

நடுவே ஆடுவாள் சிங்காரி.

ருமேனியா

41.⁠ ஆற்றைக் கடக்கும்;

அக்கரை போகும்;

தண்ணீரைக் கலக்காது;

தானும் நனையாது.

42.⁠ எவர்க்கும் தெரியாத பொருள்;

எல்லையெல்லாம் கடக்கும் பொருள்.

ஸ்பெயின்

43.⁠ ஆயிரம் பேர் அணிவகுப்பர்;

ஆணுலும் துளசி கிளம்பாது.

போர்ச்சுகல்

44.⁠ ஒருவன் உருவம் வளர வளர

உன்றன் பார்வை குறையக் குறைய.

45.⁠ கூரை வீட்டைப் பிரித்தால்

ஒட்டு வீடு;

ஒட்டு வீட்டைப் பிரித்தால்

வெள்ளை மாளிகை;

வெள்ளே மாளிகை

உள்ளே குளம்.

46.⁠ செத்துப் போன சின்னப்பையன்

ஐந்து பேரைச் சுமக்கிறான்.

58.⁠ ஒருவனுக்கு இரண்டு கண்;

பகலில் பார்க்கும் ஒரு கண்;

இரவில் பார்க்கும் இன்னொரு கண்.

பெல்ஜியம்

48.⁠ செத்தபின் நடனம்

செய்பவள் யாரோ?

ஹாலந்து

49.⁠ சின்னப் பையன் வந்தான்;

திருடன் ஓடிப் போனான்.

ஜெர்மனி

50.⁠ அண்ணன் தம்பி நால்வர்.

ஒருவன் ஓடுவான்; சளைப்பதில்லை.

இன்னொருவன் தின்பான்; திருப்தியில்லை.

அடுத்தவன் குடிப்பான்; நிறைவதில்லை.

மற்றொருவன் பாடுவான்; இனிமையில்லை.

51.⁠ என்னைத் தரையில் புதைத்தார்கள்,

என்போல் பலபேர் கிடைத்தார்கள்.

52.⁠ அதிக நீளமும் இல்லை;

அதிக அகலமும் இல்லை.

உடையவர் அளந்தால்

ஒரு சாண் நீளம்.

ஸ்விட்ஸர்லாந்து

53.⁠ ஒரே வீட்டுக்கு ஒரே ஆள்;

உருவில் மிகவும் சிறிய ஆள்.

டென்மார்க்

54.⁠ சாப்பாட்டுக்கு அவசியமாம்;

தனியாய்த் தின்ன முடியாதாம்.

நார்வே

55.⁠ வேலைக்காரிகள் வெள்ளை நிறம்;

வீட்டு வாசல் காக்கிறார்கள்;

வீட்டுக்காரி சிவப்பு நிறம்;

மேலும் கீழும் ஆடுகிறாள்.

56.⁠ ஒரு மரத்திற்குப் பன்னிரண்டு கிளை.

ஒரு கிளைக்கு நாலு கூடு

ஒரு கூட்டுக்கு ஏழு முட்டை

ஏழு முட்டையில் ஒரு முட்டை

பொன் முட்டை!

ஸ்வீடன்

57.⁠ அழையாத விருந்தினனாய்

அரண்மனைக்குள் செல்வேன்;

அரசர்முன் அமர்வேன்;

அறுசுவையோடு உண்பேன்.

நான் யார்?

58.⁠ அறுக்க உதவாத்

கருக்கரிவாள் எது?

லாப்லாந்து

59.⁠ அண்ணன் தம்பி இரண்டு பேர்

அடியெடுத்து வைத்தார்கள்.

அண்ணன் நடந்தது பன்னிரண்டு மைல்

தம்பி நடந்தது ஒரே மைல். அண்ணன் யார்? தம்பி யார் ?

ஐஸ்லாந்து

60.⁠ மலையிலிருந்து விழுகிறவனுக்கு

வாயில்லை; கதறுவான்.

காலில்லை; ஓடுவான்.

கண்டவர் உண்டோ ?

81.⁠ உள்ளே உரோமம்;

வெளியே வழுக்கை.

பின்லாந்து

62.⁠ ஒராயிரம்பேர் தலை குனிவர்;

ஒருவரை ஒருவர் வணங்கிடுவர்.

63.⁠ ஐந்து கரை; நாலு கால்வாய்.

அது என்ன ?

எஸ்தோனியா

64.⁠ தன் பிள்ளைகளைத் தானே விழுங்கும்

தாயார் யார் ?

லுதுவேனியா

65.⁠ கத்திக் கத்திக் குலைக்கும் காய்;

கதவுக்குப் பின்னுல் ஒளியும் காய்.

66.⁠ பளிங்கியை உடைத்தால் வெள்ளி;

வெள்ளியை உடைத்தால் தங்கம்.

ஹங்கேரி

67.⁠ இரும்புக் குதிரைக் குட்டி

என் முகத்தில் மேயுது.

68.⁠ காலையில் கடை திறக்கும்

இரவு வங்தால் இறுக மூடும்.

69.⁠ காலும் இல்லை;

கையும் இல்லை;

முகட்டைத் தாண்டி

மேலே போவான்.

70.⁠ வெள்ளைக் குடையை மேலே பிடிப்பார்;

மெதுவாய்த் தட்டினுல் ஒடிந்து விழுவார்.

செக்கோஸ்லோவேக்கியா

71.⁠ நாடு உண்டு; வீடு இல்லை.

காடு உண்டு; மரம் இல்லை.

ஆறு உண்டு; மீன் இல்லை.

72.⁠ குளத்துக்குள்ளே விழுந்தாலும்

கொஞ்சமும் நீர் அலையாது.

பல்கேரியா

73.⁠ கஷ்டப்பட்டு நூல் நூற்பார்;

கட்டிக் கொள்ளத் துணியில்லை.

போலந்து

74.⁠ எல்லை யில்லாத வயலிலே

எண்ண முடியாத ஆடுகள்.

75.⁠ வயல் வெளியில் ஆடும் போது

வைரத் தோட்டைத் தொலைத்தாளாம். சந்திரன் பார்த்தான்; சபலம் இல்லை. சூரியன் பார்த்தான்; தூக்கிச் சென்றான்

ருஷ்யா

76.⁠ வீடு வாசல் காப்பவன்;

விசுவாசமாய் இருப்பவன்;

கடிக்க மாட்டான்;

குலைக்க மாட்டான்;

கதவை ஒட்டிக் கிடப்பவன்.

77.⁠ ஒருவரை இருவராய்க் காட்டும்.

உங்கள் வீட்டிலும் இருக்கும்;

எங்கள் வீட்டிலும் இருக்கும்;

அது என்ன?

78.⁠ பார்வையில்லாத மனிதன்

பலபேருக்கு வழி சொல்வான்.

79.⁠ உயிரில்லாத நீதிபதி

ஒழுங்காய்த் தீர்ப்பு வழங்குகிறார்.

யுகோஸ்லேவியா

80.⁠ எல்லாரையும் கூவி அழைப்பான்;

ஆனால்,

எவர் அழைத்தாலும் நகரமாட்டான்.

அவன் யார் ?

81.⁠ பகலிலே சும்மாயிருக்கும்.

இரவிலே ஆளைச் சுமக்கும்.

அல்பேனியா

82.⁠ ஆயிரம் ஆயிரம் முடிச்சு

ஆயிரம் ஆயிரம் ஓட்டை .

கிரீஸ்

83.⁠ ஏரித் தண்ணீரைப்

பாம்பு குடிக்குது.

84.⁠ அதற்கோ பெயருண்டு.

முதலிலே நான்கு கால்.

அடுத்து இரண்டு கால்.

அப்புறம் மூன்று கால்.

அது என்ன?

85.⁠ ஐந்து பேர் பிடிக்க

முப்பத்திரண்டு பேர் அடிக்க

ஒருவன் அணைக்க

ஐயோ, விழுந்தான்

ஆழக் குழியில்!

86.⁠ பாடும் குயிலுக்குப்

பளிங்கியிலே வேலி

துருக்கி

87. ஓட்டு வீட்டில்

ஓட்டை ஏழு.

88.⁠ வெட்ட, வெட்ட மீண்டும்

விளையும் பயிர்

என்ன பயிர் ?

இஸ்ரேல்

89.⁠ எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும்.

ஆனால்,

எவரும் என்னை ஏறிட்டுப் பாரார்.

30. மேலே செல்லும்; விமானம் அல்ல.

தண்ணீர் உண்டு; நதியும் அல்ல.

91.⁠ இரண்டு பெண்கள் - அவர்கள்

இரட்டைப் பிறவிகள்.

ஒருத்தி மேலே போனால்,

ஒருத்தி கீழே போவாள்.

92.⁠ வலையை விரிப்பேன்-நான்

செம்படவனல்ல.

வலையிலே பிடிப்பேன்-அது

மீனும் அல்ல.

எகிப்து

93.⁠ ஓரடி நீளம்

ஒருவரைச் சுமக்கும்.

94.⁠ உழவில்லை; நடவில்லை.

உணவுக்கு உதவிடுமாம்.

தண்ணீரில் பிறந்ததுவாம்;

தண்ணீரில் மறைந்திடுமாம்.

95.⁠ தலையில்லாதவன்

தண்ணீர் எடுக்கிறான்.

மடகாஸ்கர்

@[[:User:|]]: செத்தவன் குரல்

எத்தனை பேருக்குக் கேட்குது!

அல்ஜீரியா

@[[:User:|]]: வெள்ளையாக இருப்பான்;

வெட்டவெட்ட வளர்வான்.

98.⁠ ஆற்றிலிருந்து பாறை வந்தது:

பாறையுமல்ல.

அதற்கு நான்கு கால்கள் உண்டு;

ஆனையும் அல்ல.

குண்டு குண்டாய் முட்டையிடும்;

கோழியுமல்ல.

என்ன அது?

ஆப்பிரிக்கப் பூர்வகுடி

99.⁠ சந்தைக்குக் கொண்டுபோன மாடு

தன்னோடே திரும்பி வந்ததாம்.

100.⁠ பிள்ளைகள் ஆடுவார்.

பெற்றவள் ஆடமாட்டாள்.

101.⁠ கரிய பாம்பு இரண்டு

அருகருகே படுத்திருக்கு.

மரிஷியஸ்

102.⁠ உயரே எறிந்தால் தரையில் விழுவான்;

தரையில் எறிந்தால் உயரே எழுவான்.

103.⁠ சின்னஞ் சிறிய தூசி விழுந்தாலும்

பொங்கி எழும் குளம் எது?

அரேபியா

104.⁠ ஆனை போலப் பெரிதாயிருக்கும்;

அடக்கிப் பிடித்தால் கையில் இருக்கும்.

ஈரான்

105.⁠ சிரிப்பான்; வாயில்லை .

அழுவான்; கண்ணில்லை.

அலைவான்; காலில்லை.

அவன் யார் ?

106.⁠ பாரில் வந்து சேரும் முன்னே

பத்து மாதம் சிறைவாசம்.

107.⁠ கறுப்பன் ஒருவன்.

வெள்ளையன் ஒருவன்.

காண்பது இல்லை;

தொடர்வது உண்டு.

108.⁠ பகலெல்லாம் ஊரைச் சுற்றுவான்.

இரவில்,

கதவோரமாய்க் காத்துக் கிடப்பான்.

109.⁠ கூடப்பிறந்த இருவருக்குக்

குறுக்கே சுவர் உண்டு.

ஒருவரை ஒருவர்

ஒருநாளும் பாரார்.

இலங்கை

110.⁠ வாங்குவோர், தனக்குப் பயன்படுத்தார்.

தனக்குப் பயன்படுத்துவோர் பார்க்க மாட்டார்.

111.⁠ மரத்துக்கு மேலே பழம்.

பழத்துக்கு மேலே மரம்.

112.⁠ கறுப்புத் தொப்பி அணிந்த

கனவான்-அவர் யார் ?

113.⁠ எத்தனை அடி அடித்தாலும்

இம்மியும் வலிக்காது.

114.⁠ உச்சியிலே நீண்ட இலை;

உடம்பெல்லாம் கணுக் கணுவாம்;

தின்பதற்கோ மிக ருசியாம்.

தேவையில்லை என்பார் யார் ?

தாய்லாந்து

115.⁠ சின்னக் குகைக்குள்ளே

சிவப்புத் துணி-அது

எந்நேரமும் ஈரம்;

எளிதில் உலராது.

116.⁠ ஓட்டு வீட்டை

உடன் தூக்கிச் செல்கிறார்.

அவர் யார் ?

117.⁠ கணக்கில்லாத பிள்ளைகளைக்

கழுத்தைச் சுற்றிச் சுமக்கும் தாய்.

அந்தத் தாய்

எந்தத் தாய்?

118.⁠ எலும்பு உண்டு; தோல் இல்லை.

கண்கள் உண்டு; தலை இல்லை.

தண்ணீரில் நீந்தும்; தரையிலே நடக்கும்.

119.⁠ ஒற்றைக் காலால் ஆடுவான்;

'உம்'மெனப் பாட்டுப் பாடுவான்.

இந்தோ -சீனா

120.⁠ அம்மா வுடனே

ஆயிரம் குழந்தைகள்,

விடிந்ததும் அவர்கள்

அனைவரும் மடிந்தனர்.

அப்புறம் வந்தான்

அவன் ஒருவீரன்.

அவனைப் பார்க்க

அனைவரும் அஞ்சினர்.

121.⁠ முந்நூறு கால் உடையாள்;

முணுமுணுப்புத் தான் அறியாள்;

வேண்டாத பேரை யெல்லாம்

விரட்டி ஓட்டும் வேலைக்காரி.

122.⁠ என்னைப் போலே இருப்பாய்;

ஆனால், ஏனோ பேச மாட்டாய் ?

123.⁠ வீட்டுக்கு வந்த விருந்தாளியைக்

குனிந்து குனிந்து கும்பிடும்

கோழி எது?

மங்கோலியா

124.⁠ தோல் வீட்டுக்குள்ளே

துணி வீடு; துணி வீட்டுக்குள்ளே ஐந்து பேரு.

125.⁠ குளத்தில் தலையை முக்கும் பறவை;

குடித்துக் குடித்துத் திரும்பும் பறவை;

வயலைக் கொத்தி நடக்கும் பறவை;

வார்த்தை கூறிச் செல்லும் பறவை.

126.⁠ பட்டுத் துணியைச் சுருட்ட முடியாது.

பத்தாயிரம் முத்தைக் கோக்க முடியாது.

திபேத்

127.⁠ கட்டி வைத்தால் நடந்து போவான்

அவிழ்த்து விட்டால் சும்மா கிடப்பான்.

128.⁠ அப்பாவுக்கு இருபிள்ளைகள்;

அடிஅடியென்று அடித்தார்கள்;

அடித்த பேரைத் தடுக்கவும் இல்லை;

அலறும் தந்தையைத் தேற்றவும் இல்லை.

ஆனாலும், அநேகர் ஆனந்தப்பட்டார்கள்.

சைபீரியா

129.⁠ கிளையுள்ள மரத்தைத்

தலையிலே தாங்கும். அது என்ன ?

130.⁠ நாக்கில்லாதவன்

நல்லது சொல்வான்,

131.⁠ அங்குல மாட்டுக்கு

அரைமைல் வால்.

கொரியா

132.⁠ வேளா வேளை குளிப்பான்

மிகவும் சுத்தக்காரன்.

133.⁠ எப்போதும் வயிறு

உப்பியே இருப்பாள். அவள் யார்?

பிலிப்பைன்ஸ்

134.⁠ பிள்ளைக்கு வால் உண்டு;

பெற்றோர்க்கு வால் இல்லை.

135.⁠ "என்னைச் சுமந்தால்

உன்னைச் சுமப்பேன்."

- எவர் சொன்ன சொல் இது?

136.⁠ கால் இல்லை; தாவுவான்.

வாய் இல்லை; கத்துவான், அவன் யார்?

137.⁠ திறந்து திறந்து மூடினாலும்

சிறிதும் ஓசை கேட்காது.

ஜாவா

138.⁠ நாலு கால் உண்டு ;

நடக்கத் தெரியாது.

139.⁠ வெள்ளைப் பெட்டியில்

வெள்ளியும் தங்கமும்.

140.⁠ உச்சியிலே கிரீடம்;

அவள்

உடம்பெல்லாம் கண்.

141.⁠ இரண்டு நண்பர்கள்

எப்போதும் சேர்ந்திருப்பர்.

ஒருவர் முன்னால் போனால்,

மற்றவர் பின்னால் போவார்.

பிஜித்தீவு

142.⁠ இருபது பேர் தலையில்

எப்போதும் வெள்ளைத் தொப்பி உண்டு.

ஹாவாய்

143.⁠ சுவர் மூன்று தாண்டினுல்

சுனை ஒன்று காணலாம்.

144.⁠ இரு புறமும் பாதை;

இடையிலே ஒரு துண்.

மலேயா

145.⁠ பகலில் இருபுறமும்

இரவில் நடுவிலும்

இருக்கும்; அது என்ன ?

146.⁠ வெட்டலாம்; ஆனால்

பிளவு படாது.

அது என்ன ?

147.⁠ கத்திபோல் இலை இருக்கும்.

கண்டாமணி போல் பழம் இருக்கும்.

அது என்ன ?

பாகிஸ்தான்

148.⁠ இளமையில் கொம்பு உண்டு;

வளர்ந்ததும் கொம்பு இல்லை.

149.⁠ நீரிலே வாழும்; மீன் அல்ல.

கொம்புமே உண்டு; மாடல்ல.

150.⁠ தன் தலையைத் தானே விழுங்கும் '

பிராணி எது?

பர்மா

151.⁠ வெளுக்காத போர்வை;

வெள்ளையா யிருக்கும்.

நிரப்பாத குடம்;

நிறைந்தே இருக்கும்.

152.⁠ மெதுவாய்த் துடுப்பு நான்கு தள்ளிவர,

விதானத்துள் சீமாட்டி. அமர்ந்துவர.

153.⁠ நாணல் புதருக்கு

நடுவே ஓடுது சிறு படகு.

154.⁠ ஒரு கோப்பை பசும்பால்

ஊரெல்லாம் பெருகிடுமாம்

155.⁠ சின்னஞ் சிறு அறையில்

சீராக வாழ்ந்திடுவார்;

கறுத்த உடை அணிவார்.

கவலை யில்லாத் துறவி அவர்.

கள்ளைக் குடித்திடுவார்;

கடவுளைப் பாடிடுவார்.

விடைகள்

1. வானம், நட்சத்திரங்கள், நிலா, சூரியன்

2. கை உறை

3. நீர்க்குமிழி

4. பெயர்

5. ஊசி

6. நெருப்பு

7. கண்ணாடி

8. துடைப்பம்

9. கண் இமைகள்

10. தூக்கம்

11. இடி, மழை

12. மரம், கரி, நெருப்பு

13. வாழைப் பழம்

14. பம்பரம்

15. நாக்கு

16. கோனி

17. நட்சத்திரங்கள்

18. கத்தரிக் கோல்

19. பறவை இறகு

20. காக்கை

21. கைவிரல்களிலுள்ள நகங்கள்

22. ஊசியும் நூலும்

23. வாழைப்பழச் சீப்பு

24. தெரு

25. ஹார்மோனியம் அல்லது பியானோ

26. தலைமயிர்

27. தீக்குச்சி

28. கொசு

29. நாக்கு

30. வெங்காயம்

31. மெழுகுவர்த்தி

32. மீன்

33. மை

34. மெழுகுவர்த்தி

35. தாள், மை

36. முட்டை

37. பம்புக் குழாய்

38. நூல்கண்டு

39. முட்டை

40. பல், நாக்கு

41. குரல்

42. காற்று

43. எறும்புக் கூட்டம்

44. இருள்

45. தேங்காய்

46. செருப்பு

47. சூரியன், சந்திரன்

48. சருகு

49. விளக்கு, இருள்

50. நீர், நெருப்பு, பூமி, காற்று

51. விதை

52. செருப்பு

53. நத்தை

54. உப்பு

55. பல், நாக்கு

56. வருஷம், மாதம், வாரம், கிழமை, விடுமுறை நாளான ஞாயிறு 57. ஈ

58. பிறைச்சந்திரன்

59. கடிகார முட்கள்

60. அருவி

61. மெழுகு வர்த்தி

62. முற்றிய கதிர்கள்

63. கை

64. கடலில் ஆறுகள் விழுதல்

65. நாக்கு

66. முட்டை

67. க்ஷவரக்கத்தி

68. கண்

69. புகை

70. காளான்

71. பூகோளப் படம்

72. சூரிய ஒளி

73. சிலந்தி

74. வானம், நட்சத்திரங்கள்

75. பனித்துளி

76. பூட்டு

77. முகம் பார்க்கும் கண்ணாடி

78. கை காட்டி

79. தராசு

80. மணி

81. படுக்கை

82. வலை

83. எண்ணெய், திரி

84. மனிதன் (தவழ்வது, தானாக நடப்பது, கோல் ஊன்றி கடப்பது)

85. உணவு

86. நாக்கு

87. தலை (கண், காது, மூக்கு, வாய்)

88. தலைமயிர்

89. சூரியன்

90. மேகம்

91. தராசுத் தட்டுகள்

92. சிலந்தியும், பூச்சியும்

93. செருப்பு

94. உப்பு

95. வாளி

96. முரசு

97. நகம்

98. ஆமை

99. நிழல்

100. கிளைகளும், அடிமரமும்

101. ரயில் தண்டவாளம்

102. பந்து

103. கண்

104. கொசு வலை

105. மேகம்

106. குழந்தையின் பிறப்பு

107. இரவும், பகலும்

108. செருப்பு

109. கண்கள்

110. சவப் பெட்டி

111. அன்னாசிப் பழம்

112. தீக்குச்சி

113. உரல்

114. கரும்பு

115. நாக்கு

116. ஆமை

117. தென்னைமரம்

118. நண்டு

119. பம்பரம்

120. சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன்

121. துடைப்பம்

122. முகம் பார்க்கும் கண்ணாடி

123. தேயிலைக்கேத்தல்

124. பூட்ஸ்,கால்சராய், கால்விரல்கள்

125. கட்டைப் பேனா

126. வானம், நட்சத்திரங்கள்

127. பூட்ஸ்

128. மத்தளம் அடித்தல்

129. கலை மான்

130. புத்தகம்

131. ஊசியும் நூலும்

132. சாப்பிடும் தட்டு

133. பானை

134. தவளை

135. செருப்பு

136. சமுத்திரம்

137. கண் இமை

138. நாற்காலி

139. முட்டை

140. அன்னாசிப் பழம்

141. கால்கள்

142. கை, கால், நகங்கள்

143. தேங்காய்

144. மூக்கு

145. கதவு

146. தண்ணீர்

147. அன்னாசிப் பழம்

148. சந்திரன்

149. நத்தை

150. ஆமை

151. தேங்காய்

152. ஆமை

153. நெசவு நாடா

154. முழு நிலா

155. தேனி ஆயிரம் பேர் அணிவகுப்பர் ;

ஆனாலும் தூசி கிளம்பாது

மேலே ஒரு விடுகதை கீழே ஒரு விடுகதை. இரண்டும் வெவ்வேறு நாட்டு விடுகதைகள். இந்த இரண்டுக்கும் உங்களால் சரியான விடை கூற முடியுமா? கூறிவிட்டால்......? உடனேயே நீங்கள் கெட்டிக்காரர்களாகிவிட முடியாது. இந்தப் புத்தகத்திலுள்ள அத்தனைக்கும் நீங்கள் சரியான விடை கூற வேண்டும். அப்போதுதான் உண்மையிலே நீங்கள் கெட்டிக்காரர்கள் என்ற பட்டத்தைப் பெறமுடியும் !

தகப்பனுக்குப் பத்துப் பிள்ளை

அவர்கள்

தலைக்குப் பின்னே தொப்பி உண்டு.